கல்வித்தந்தை காமராஜர் தனது வாழ்நாள் முழுவதும் சமூக தொண்டாற்றி மக்களுக்காகவே வாழ்ந்தார். 1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் காமராஜர் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட போது அவருக்கு வயது 16. இதனையடுத்து காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் காமராஜர் கலந்து கொண்ட போது அவருக்கு 18 வயது தான் ஆனது. கடந்த 1930-ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக காமராஜர் முதன் முதலில் சிறைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் தீவிர விடுதலை போராட்டத்தில் இறங்கிய காமராஜர் ஒத்துழையாமை இயக்கம் முதல் அடுத்தடுத்த போராட்டங்களில் கலந்து கொண்டு 6  முறை சிறை சென்றுள்ளார். மொத்தமாக அவர் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 1922-ஆம் ஆண்டு ஈ.வெ ராமசாமி தலைமையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக காமராஜர் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 1954-ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டு வரை சுமார் 9 ஆண்டுகள் காமராஜர் முதல்வராக பதவி வகித்த போது ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகளை திறந்தார். மாணவர்களுக்கிடையே ஏற்ற த்தாழ்வு எண்ணங்களை போக்க சீருடைகள் இலவச உணவு திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்து இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் கல்வித்தந்தை காமராஜர்.

நேருவின் மறைவிற்குப் பிறகு லால் பகதூர் சாத்திரியையும், அவரது மறைவிற்குப் பிறகு இந்திரா காந்தியை இருமுறையும் என 3 முறை பிரதமர்களை தேர்வு செய்த பெருமை காமராஜரையே சாரும். இதனால் அவர் “கிங் மேக்கர்” என அழைக்கப்பட்டார். நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றை தாரக மந்திரமாக பின்பற்றிய காமராஜர் சிறந்த அரசியல் தலைவர் என்பதில் ஐயமில்லை. வாழ்நாள் முழுவதும் காமராஜர் திருமணம் செய்யாமல் ஆயுளை நிறைவு செய்தார்.

இதனை அடுத்து காந்தியடிகளின் நெறியில் வாழ்ந்த காமராஜர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி உயிரிழந்தார். அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி காமராஜருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வை நடத்த உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து 1976-ஆம் ஆண்டு காமராஜருக்கு குடிமக்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.