வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கு மின்வெளிகள் அமைப்பதற்கான விதிகளை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

விவசாய நிலங்களில் மின் வேலிகள் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. சூரிய சக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயம் என அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காப்புக்காட்டின் வனப்பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் மின்வேலி அமைத்தவர்கள் பதிவு செய்வது கட்டாயம். ஏற்கனவே மின்வேலி அமைத்துள்ளவர்கள் 60 நாட்களுக்குள் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அதாவது, மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது, ஏற்கனவே அமைத்த மின் வேலிகளை பதிவு செய்வது கட்டாயம். விதிகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் பதிவு சான்றிதழை பெற விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே மின்வேலி அமைத்தவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மின்வேலிகளை அமைக்கும் நிறுவனங்கள் BIS தர நிலைகளுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டிருக்க வேண்டும். மின்வேலி உள்ள இடத்தை மாவட்ட வன அலுவலர், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். மின்வேலிகளில் புதிய விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என அதிகாரிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வனவிலங்குகளை மின்விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கு தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.