2023 ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானிடம் இருந்து பறித்தால், பாகிஸ்தானும் உலக கோப்பையை விளையாட இந்தியா வராது என்று பிசிசிஐ தலைவர் ஜெய் ஷாவிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை (ODI உலகக் கோப்பை 2023) இந்தியாவில் நடைபெற உள்ளது,  இதற்கு முன்  16வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது, ஆகவே பாகிஸ்தானுக்கு பதிலாக பொதுவான ஒரு இடத்தில் ஆசியக்கோப்பை போட்டி நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா தெரிவித்துள்ளார். அதாவது ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் ரமீஸ் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தானில் நடைபெறவில்லை என்றால், பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக்கு செல்லாது என்றும் அவர் கூறியிருந்தார். இதேபோன்ற நிலைப்பாட்டை தற்போதையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தியும் கையில் எடுத்துள்ளார்..

அதாவது நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பஹ்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் பிசிபி தலைவர் சேத்தி ஆசியக்கோப்பையை பாகிஸ்தானில் தான் நடத்த வேண்டும் என தெளிவுபடுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவும் பாகிஸ்தானுக்கு சென்று ஆடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இதனால் இந்த கூட்டத்தில் எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கவில்லை.. எனவே அடுத்த மாதம் மீண்டும் கூட்டம் நடத்தி போட்டி நடத்தும் இடம் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

இதனிடையே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதங்களின் விவரம் கசிந்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்த விஷயத்தில் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்பிடம்  ஆலோசனை நடத்திய பின் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

அப்போது பேசிய அவர், ஆசிய கோப்பையில் பல அணிகள் இடம்பெறும். மேலும் இந்தியாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் உறுதியளிக்கிறது. எனவே ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பாததற்கு எந்த காரணமும் சொல்ல முடியாது. ஆசியக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணியை அனுப்ப பிசிசிஐ தனது அரசாங்கத்திடம் அனுமதி பெறவில்லை என்றால், பாகிஸ்தானும் உலகக் கோப்பைக்கு (ODI உலகக் கோப்பை 2023) தனது அணியை அனுப்பாது என்று ஜெய் ஷாவிடம் சேத்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் அடுத்த ஆசிய கவுன்சில் கூட்டத்துக்கு முன்னதாக பிசிசிஐ தங்களது அரசிடம் பேசி ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். அப்போது தான் நாங்கள் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்று விளையாடுவது பற்றி ஐசிசியிடம் விவாதிக்க முடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.. மேலும் அவர் 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட போது, அந்த சமயத்தில் ஏன் இந்திய கிரிக்கெட் வாரியம் எந்தவித மறுப்பும்  தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எதிர்ப்பை காட்டிய நிலையில் தற்போதைய தலைவரும் அதே நிலைப்பாட்டை எடுத்து மிரட்டுவதால் ஆசிய கோப்பை போட்டி எங்கு நடைபெறும் என்பதில் சிக்கல் நீடிக்கிறது..