மும்பையில் இருந்து கோவா நோக்கி சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நடிகர் ஆரியன் கான் மகன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற நிலையில், ஆர்யன் கான் குற்றம் அற்றவர் என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் ஐஆர்எஸ் அதிகாரி சமீர் வான்கடே தலைமையில் சென்ற குழு விசாரணையில் சில முறைகேடுகள் இருப்பதை சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது.

போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடே மற்றும் அவருடைய குழு 25 கோடி லஞ்சம் கேட்டதாகவும் 50 லட்சம் பணத்தை முன்பணமாக பெற்றதாகவும் சிபிஐக்கு தகவல் போனது. இந்த புகாரின் அடிப்படையில் சமீர் வான்கடே உட்பட 5 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது சிக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் குறித்த விவரங்களை சிபிஐ வெளியிடவில்லை. மேலும் கடந்த வருடம் மே மாதம் சமீர் வான்கடே போதை பொருள் தடுப்பு பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.