சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பணிஓய்வு பெற்றார். இதையடுத்து மூத்த நீதிபதி எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா போன்றோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். சென்ற 8 மாதங்களாக தலைமை நீதிபதி பணியிடம் நிரப்பப்படமால் இருந்து வந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்காபூர்வாலாவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது.

இதை ஏற்ற குடியரசு தலைவர், மே 26 எஸ்.வி.கங்கா பூர்வாலாவை தலைமை நீதிபதியாக நியமிக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் தலைமை நீதிபதியாக இன்று காலை 10 மணிக்கு சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் எஸ்.வி. கங்காபூர்வாலா பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.