கடலூரில் இன்று பாஜக கட்சியின் சார்பில் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமை தாங்குவார். அதன் பிறகு இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தின் போது ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? அல்லது கூட்டணி கட்சி நிற்குமா என்பது தெரியவரும்.

அதன் பிறகு 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் சில முக்கிய முடிவுகள் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. திமுக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்பது சந்தேகம் இல்லாத ஒன்று. இந்நிலையில் தற்போது பாஜக கட்சியில் 4 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதை வைத்து மக்களவைத் தேர்தலில் வாக்கு வங்கி அரசியலை எப்படி சேகரிப்பது, பூத் கமிட்டி வேலைகளை செய்வது, பாஜகவிற்கு செல்வாக்கு மிக்க தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்துவது போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடலூர்  மாவட்டத்தில் நடைபெறும் பாஜக மாநில அளவிலான செயற்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்று கட்சியின் தொண்டர்கள் பலரும் பெருமிதம் கொள்கிறார்கள்.