திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்ன தோட்டம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ்(33) சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரமேஷுக்கும் ஈரோட்டைச் சேர்ந்த யுவராணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராணி பெரியசேமூரில் இருக்கும் இருக்கும் தனது தந்தை வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது மனைவியை பார்ப்பதற்காக திருப்பூரிலிருந்து மாமனார் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார் டிரைவரான ஜெய் கிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.