சென்னையில், பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, ஆண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி ஒரு போலி சமூக வலைதள கணக்கு மூலம் பாலியல் தொழில் சம்பந்தமான தகவல்களைப் பரப்பி, ஆண்களிடம் பணம் பறிப்பதாக புகார் அளித்தார். இதனையடுத்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலியான கணக்கு மூலம் பண மோசடி செய்யும் நபரை கண்டறிய, சைபர் கிரைம் போலீசார் அதில் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் செல்போன் எண்ணைக் கண்காணித்தனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நெட்வொர்க் மூலம் கிருஷ்ணன் என்ற இளைஞரை கைது செய்தனர். கிருஷ்ணன் பல்வேறு போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி, ஆபாசமாக பேசி ஆண்களிடம் பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.

கிருஷ்ணன், தனது பள்ளிப்படிப்பை கூட முடிக்காத நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து, பின்னர் புதுச்சேரியில் ஒரு தனியார் தங்க நகை கடையில் விற்பனை பிரதிநிதியாக இருந்துள்ளார். அவர் தனது தகுதியை தவறாக பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் ஆபாச ரீல்ஸ் வெளியிடும் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அவரது செல்போனை ஆய்வு செய்த போது, பல பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலி கணக்குகள் காணப்பட்டன. ஆண்கள் தன்னிடம் மென்செஞ்சர் மூலமாக தொடர்பு கொள்ளும் போது, ஆபாசமாக பேசுவது, புகைப்படங்களை அனுப்புவது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், குரல் மாற்றி செயலியைப் பயன்படுத்தி, ஆண்கள் சந்தேகம் கொண்டால் பெண்களின் குரலில் பேசி ஏமாற்றியதாகவும் தெரியவந்தது.

கடந்த இரண்டு வருடங்களில் இவர் பல ஆண்களை ஏமாற்றி, இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளார். தங்க நகை விற்பனை பிரதிநிதியாக வேலை முடிந்ததும், இவ்வாறு சமூக வலைதளங்களில் மோசடியில் ஈடுபட்டு பணத்தை சம்பாதித்தார். கிருஷ்ணனின் மோசடி செய்கையை சைபர் கிரைம் போலீசார் உறுதிப்படுத்தி, அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.