
மஹாராஷ்டிரா, பல்கர் மாவட்டம் நாய்காவன் பகுதியில் வசிக்கும் 42 வயது பெண், மீரா ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பர் தொடர்ந்து திருமண வாக்குறுதி பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த நபர் தனது அடையாளத்தை மறைத்து, தன்னை ஒரு சுங்கத்துறை அதிகாரியாக காட்டி போலி அடையாள அட்டை வழங்கியதாகவும், ஒரு குடியிருப்பை வாங்கித் தருவதாக கூறி ₹1.03 கோடி மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், நாய்காவன் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையின் தகவலின்படி, அந்த நபர் முதன்முதலில் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெண்னை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்வந்து, தனது அடையாளத்தை நிரூபிக்க மும்பை சுங்கத்துறையின் அடையாள அட்டையும், ரிசர்வ் வங்கி நுழைவாயில் அனுமதி அட்டையும் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதியை நம்பிய பெண், அவருடன் தொடர்பை தொடர்ந்ததாகவும், பின்னர் நலாசோபாரா இணைப்பு சாலைக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புகாரின் அடிப்படையில் குற்றவாளிக்கு எதிராக பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அவர் பயன்படுத்திய போலி அடையாள அட்டைகள், வங்கி அனுமதி ஆவணங்கள் உள்ளிட்டவை உண்மையா அல்லது போலியா என்பதை காவல்துறை ஆய்வு செய்து வருகின்றனர். பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதற்கும் நம்ப வைத்து ஏமாற்றியதற்கும் குற்றவாளிக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.