பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, பெண்கள் தைரியமாக புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும், அதற்கு சட்டம் துணையாக இருக்கிறது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார், கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, மலையாள திரைப்பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமை என பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வது பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. இது தொழில்நுட்ப உலகம், எந்த தவறு செய்தாலும் உடனடியாக தெரிந்து விடும், மாட்டிக்கொள்ளவோம் என்று தெரிந்தும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்க எப்படி தைரியம் வருகிறது.

பெண்கள் படித்து, அறிவில் சிறந்து, உயர்ந்த பொறுப்புகளில் இருந்தாலும் சில ஆண்களுக்கு, பெண்களை பார்க்க போகப் பொருளாகவே தெரிகின்றது. பெண்களை சகோதரியாக, தாயாக, மகளாக பார்க்கக்கூடிய மனநிலை இருக்க வேண்டும். அதேபோன்று பெண்கள் வேலை பார்க்கும் கல்வி நிலையங்கள், வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு சூழல் ஏற்படுத்த வேண்டும். பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துமீறலில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் செய்யும் நபர்கள் தப்பிவிடக் கூடாது, அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை தான் மற்றவர்களுக்கு பாடமாக அமைகிறது. எனவே பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை நிறுவனங்களும் அரசும் உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.