ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டூர் அணி தங்கப்பாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சோனியா. இவருக்கு கைக்குழந்தை உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சோனியா மனு அளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென சோனியா தான்  வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சோனியாவை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

மேலும் இது குறித்த விசாரணையில் சோனியா கூறியதாவது,”தனது வீட்டின் அருகில் உள்ள கண்ணப்பன் என்பவர் இருவீட்டாருக்கும் ஆன பொதுப் பாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளார். மேலும் தன்னை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது மீறினால் கடப்பாரை, மண்வெட்டி போன்றவற்றால் வெட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். வீட்டு வாசலில் குப்பைகளை எரிப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து பலமுறை கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை”என கண்ணீர் மல்க தனது குறையை தெரிவித்தார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி கேணிக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பத்தால் குறைதீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.