தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தெற்கு கோனார்கோட்டை கீழத்தெருவில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி, சோளம் போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு சிலரிடம் கடன் வாங்கினர். இந்நிலையில் கடன் காரர்களுக்கு பணத்தை கொடுக்க முடியாமல் கணவன், மனைவி இருவரும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் மன உளைச்சலில் நேற்று அதிகாலை வீட்டு சமையல் அறையில் சுப்புலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சிறிது நேரத்தில் கண்விழித்து எழுந்த ராமசாமியும், அவரது குழந்தைகளும் சுப்புலட்சுமி தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்புலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.