
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாய்ப்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலை 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் வேலையை தொழிலாளர்கள் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்பட்ட தீ மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியதால் கிட்டத்தட்ட 16 அறைகள் சேதமானது. விபத்தின் போது ஏற்பட்ட புகை பல மீட்டர் உயரத்திற்கும் கிளம்பிய நிலையில் 10 கிலோமீட்டர் வரை வெடிச்சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் இருந்த ராஜபாண்டி, ராஜேஷ் ,கண்ணன், ராஜசேகர், கமலேஷ் ஆகிய 5 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து இடிந்த சுவர்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நீக்கிய போது பாலகுருசாமி என்பவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் போது மருந்து கலக்கும் போது விதிமீறல் நடந்தது தெரியவந்தது. இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார். அதன் பின் பட்டாசு ஆலை தொழிற்சாலையின் போர் மேன் லோகநாதன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் சின்னகாமன் பட்டி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது இப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.