சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது, “சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமாரை சித்திரவதை செய்து விசாரிக்கும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் துணை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக கூறப்படுகிறது.

அந்த அதிகாரி யார் என தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். தற்போது வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டாலும், இது போன்ற அதிகாரிகளை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”. என தெரிவித்துள்ளார்.