
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று தான் பொங்கல். ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரிய பகவான் மற்றும் மற்ற உயிரினங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் வரவழைத்து விளையாட்டு போட்டிகள் வைத்து அன்று மிக மகிழ்வான தருணங்கள் இருக்கும். குறிப்பாக கபடி,வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் பானை உடைதல் போன்ற பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் வரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி நம் வீட்டில் உள்ள பழையவற்றை போக்கி வீட்டை தூய்மைப்படுத்துவதே போகி பண்டிகையாகும். இது மார்கழி மாதம் கடைசி நாள் கொண்டாடப்படும். அடுத்ததாக புது பானையில் புதிய அரிசியை போட்டு பொங்கல் வைத்து நெல் விளைய காரணமாக இருந்த கதிரவனுக்கு படைப்பது தான் தைப்பொங்கல். தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் அதாவது மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கலை கொண்டாடுவார்கள். இந்த நாளில் ஜல்லிக்கட்டு சில இடங்களில் வீர விளையாட்டாக நடைபெறும். நான்காம் நாள் காணும் பொங்கல். இதனை கன்னிப் பொங்கல் என்றும் கூறுவார்கள். இந்த நாளில் நண்பர்களும் உறவினர்களும் ஒருவரை ஒருவர் காணும் நாளாகும். ஒவ்வொரு வருடமும் தை மூன்றாம் நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.