தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகள் சேர விரும்பும்  மாணவர்களுக்காக  நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.

இந்நிலையில் 2025-2026 ஆம் ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில் ராஜஸ்தான் பகுதியை சேர்ந்த 3 பேர் ஒரு மாணவனின் குடும்பத்திடம் சென்று நீட் தேர்வுக்கான வினாத்தாள்களை காண்பிப்பதாக கூறியுள்ளனர். அதற்காக அவர்களை ஹரியானா மாநிலம் குரு கிராமிற்கு வரவழைத்தனர்.

அங்கு மாணவனின் குடும்பத்தினர் வினாத்தாளை காண்பிக்குமாறு கேட்டதும், 3 பேர்கொண்ட கும்பல் ரூ.40 லட்சம் பணம் வேண்டும் என்று கூறினார்கள். அவர்கள் கூறியதை கேட்டு சந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி நீட் சிறப்பு செயல்பாட்டு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் வினாத்தாள்களை கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஹர்தாஸ்,முகேஷ் மீனா, பல்வான் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.