நெல்லையில் மாவட்ட காவல்துறை  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கொலை குற்றங்கள் குறித்த விபரங்கள் அடங்கியுள்ளன. இதில் கூறப்பட்டிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 35 கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த கொலை சம்பவ வழக்குகளில் 106 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜாதி ரீதியான கொலைகள் ஏதும் நடக்கவில்லை. மேலும் நெல்லை மாவட்டத்தில் சென்ற ஆண்டு 17 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன.

இந்த கணக்கெடுப்பின்படி கடந்த 2023 ஆம் ஆண்டு ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டு கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் கஞ்சா போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா கடத்தல் வழக்குகளில் 3501 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான போக்சோ சட்டத்தின் கீழ் 100 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையில் 8 பேருக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாகன விபத்துக்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒப்பிடும்போது 20% குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளன. இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.