
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவிலுள்ள சில பகுதிகளை குறி வைத்து அனுப்பப்பட்ட ஏவுகணையை இந்திய ராணுவம் வீழ்த்தியுள்ளது. தற்போது பாகிஸ்தான் ராணுவம் எல்லை பகுதிகளில் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் காஷ்மீர் காட்டுப்பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது. அப்போது பணியில் இருந்த ஆந்திராவை சேர்ந்த முடவர் முரளி நாயக் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். அவருடைய மரண செய்தி அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ராணுவ வீரரின் தந்தை ஸ்ரீ ராம் நாயக் கூறும் போது, “எனது மகன் நாட்டிற்காக உயிர் கொடுத்துள்ளான். ஆனால் எங்களை அனாதையாக்கி விட்டான். அவர் எங்களுக்கு ஒரே மகன் என்பதால் எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. நாங்கள் அவரையே நம்பி இருந்தோம். தற்போது அவரது ஆதரவும் எங்களுக்கு இல்லாமல் போனது. இன்று காலை எனது மனைவி ஜோதி பாய்க்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய ராணுவ அதிகாரி என்னிடம் தொலைபேசியை கொடுக்கச் சொன்னார். அப்போது என்னிடம் ஹிந்தியில் பேசிய ராணுவ அதிகாரி தனது மகன் வீர மரணம் அடைந்ததாக தெரிவித்தார் என்று கூறினார்.
மேலும் அக்னிவீர் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் இணைந்த முரளிநாயக் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது வீர மரணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.