இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதை முன்னிட்டு, சவூதி அரேபியா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான குடும்ப மற்றும் வணிக விசாக்கள் ஹஜ் முடியும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு கூடுதல் பாதுகாப்பு மற்றும் பெரும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது வெப்பம் மற்றும் நெரிசலால் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலோர் பதிவு இல்லாமல் சட்டவிரோதமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்கள் என தெரியவந்தது, இதன் பின்னணியிலேயே இம்மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சவூதி அரசு தெரிவித்ததாவது, ஏப்ரல் 13 வரை வழக்கமான விசாக்கள் வழங்கப்படும், அதன் பின்னர் ஹஜ் முடியும் வரை விசாக்கள் அந்த 14 நாடுகளுக்கு வழங்கப்படாது. பதிவு செய்யாமல் ஹஜ் யாத்திரை செய்ய முயற்சிப்பவர்களை தடுப்பதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனவும் அரசு விளக்கமளித்துள்ளது.