சூடான் நாட்டை கைப்பற்றுவதில் அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 420 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,700 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் மோதல் தீவிரம் அடைந்து வருவதால் அந்நாட்டில் வேலை நிமித்தமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று சூடான் இந்தியர்களை மீட்பது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக தற்போது ஆப்ரேஷன் காவிரி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சூடான் துறைமுகத்தில் 500 இந்தியர்கள் குவிந்துள்ள நிலையில் இன்னும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை  மீட்பதற்கு இந்திய கப்பல்களும் விமானங்களும் தயார் நிலையில் இருக்கிறது என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அம்மாநிலத்தின் சிறப்பு மிகு நதியான காவிரி நதியின் பெயர் ஆப்ரேஷன் காவிரி என்று வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.