
தேனியில் பாஜக கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் பாஜக- வின் ஒரே இலக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில், திமுகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு மக்களின் ஆதரவும் அமோகமாக இருக்கிறது. எனவே வருகிற தேர்தலில் திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இதையடுத்து விஜய்யுடன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு காலத்தில் பிரசாந்த் கிஷோர் பாஜகவிற்கு ஆலோசகராக இருந்தவர், தமிழகத்தில் திமுகவிற்கு இருந்தார். இப்போது விஜயின் கட்சிக்கு இருக்கிறார். எங்கே அதிக பணம் கொடுக்கிறார்களோ அங்கு சென்று ஆலோசனை கொடுக்கும் கமிஷன் ஏஜென்ட் தான் அவர். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்ஜிஆரை தவிர வேறு யாரும் ஜெயிக்கவில்லை. அரசியலில் விஜய் வெற்றி பெற முடியாது.
விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் வரை சென்றாலும் அவரால் ஜெயிக்க முடியவில்லை. கமலஹாசன், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர் கார்த்திக், டி ராஜேந்திரன் என கட்சி ஆரம்பித்த யாருமே வெற்றி பெறவில்லை. அரசியலில் இவர்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதே தான் விஜய்க்கும் நிகழும். அவர் சினிமாவில் தொடரலாம். அரசியலில் முடியாது என்று கூறினார். சீமான் ஒரு நல்ல என்டர்டெய்னராக உள்ளார். அவரை தமிழக மக்கள் ரசிக்கிறார்கள் ஆனால் நம்பவில்லை ரசிப்பதை எல்லாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினார்.