ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய 14 வயதான வைபவ் சூரியவன்ஷி சமீபத்தில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து உலக அளவில் பெரிதும் பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் முதல் மிகப்பெரிய பிரபலங்கள் வரை அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த சிறு வயதிலேயே வைபவின் விளையாட்டுத் திறன் ஒட்டுமொத்த ரசிகர்கள் இடத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை 100 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் டக் அவுட்டில் வெளியேறினார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது, வைபவ் ஏலத்திற்குள் நுழையும் போது அவர் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். அதுவும் 13 வயதில் இதுபோன்ற ரெக்கார்டை அவர் நிகழ்த்தியிருக்கிறார் இதன் மூலமே அவரது திறமை என்னவென்று அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்து இருக்கும்.

இதனால் வைபவை தேவையில்லாமல் ஒரே நாளில் இவ்வளவு தூக்கிக் கொண்டாடக்கூடாது. ஏனெனில் அவர் இளம் வயது வீரர் என்பதால் தன்னுடைய விளையாட்டை மென்மேலும் அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவானுடன் இன்னிங்ஸ் எப்படி கட்டமைப்பது என்பதையும் முறையாக பயிற்சி கொள்ள வேண்டும்.

அவர் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஐபிஎல் தொடரில் சிக்சர் அடித்தார். இதனால் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலரும் அந்த வீரர் சிக்சர் தான் அடிப்பார் என அதற்கேற்றவாறு விக்கெட்டை வீழ்த்த பந்துகளை வீச தொடங்கியுள்ளார்கள். ஒரே போட்டியில் அதிரடி வீரர் என பெயரை வாங்கி விட்டதால் தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும்  அந்தப் பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் நினைக்க கூடாது. மேலும் வைபவ் தனது பேட்டிங் குறித்து கவலைப்பட தொடங்கி விடக்கூடாது என கவாஸ்கர் கூறியுள்ளார்.