இந்தியாவில் குழந்தைகளிடையே வகை 2 நீரிழிவு நோய் வேகமாக அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள CBSE, மாணவர்கள் அதிக சர்க்கரை உட்கொள்வதை கட்டுப்படுத்த பள்ளிகளில் “ஷுகர் போர்டு” அமைக்க அறிவுறுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, முதலில் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட வகை 2 டையபெட்டீஸ், இப்போது சிறுவர்களிடையே அதிகமாகப் பதிவாகி வருகிறது.

இதற்கான முக்கிய காரணம் பள்ளி சுற்றுச்சூழலில் கிடைக்கும் அதிக சர்க்கரை பானங்கள், ஜங்க் உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகளே என CBSE விளக்கியுள்ளது. CBSE அறிவுறுத்தியுள்ளவாறு, பள்ளிகளில் அமைக்கப்படும் “ஷுகர் போர்டு”வில் பின்வரும் தகவல்கள் இருக்க வேண்டும்:

  • ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் சர்க்கரை அளவு.
  • சாதாரணமாக பள்ளி மாணவர்கள் உண்ணும் உணவுகளில் (ஜங்க் உணவு, குளிர்பானம்) உள்ள சர்க்கரை அளவு.
  • அதிக சர்க்கரை உபயோகத்தால் ஏற்படும் உடல்நலச் சிக்கல்கள் – நீரிழிவு நோய்” , கொழுப்பு, பல் சீரழிவு
  • ஆரோக்கிய மாற்று உணவுப் பொருட்கள் குறித்து பரிந்துரை

மேலும், CBSE, பள்ளிகளில் விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதில் மாணவர்கள் மட்டும் அல்லாமல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நிறைவேற்றலுக்கான கண்காணிப்பாக, பள்ளிகள் ஷுகர் போர்டு அமைப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பற்றிய சிற்றறிக்கையும், புகைப்படங்களையும் ஜூலை 15-க்கு முன் CBSE இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் CBSE தெரிவித்துள்ளது. குழந்தைகளின் நீண்டநாள் ஆரோக்கியம், கல்விச் செயல்திறன் மற்றும் வாழ்க்கைத்திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் முக்கியப் பாத்திரம் வகிக்கும் என நம்பப்படுகிறது.