இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. அப்போது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது.

அதாவது இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு தேவைப்பட்ட ராணுவ உதவிகளை செய்த துருக்கி “தங்களது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்” என்று தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து துருக்கியின் மீதான எதிர்ப்பு இந்தியாவில் அதிகமான நிலையில் தற்போது டெல்லி ஜவஹர்கலால் நேரு பல்கலைக்கழகம் துருக்கியில் உள்ள பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தங்களை நிறுத்திக் கொண்டது. அதோடு ஐஐடி பாம்பேவும் தனது ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக ஐஐடி பாம்பே தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவை வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில் தற்போதைய பதட்டமான சூழல் காரணமாக அறிவிப்பு வரும் வரை துருக்கி பல்கலைக்கழகத்துடன் ஆன ஒப்பந்தங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இது தொடரும்” என்று கூறப்பட்டிருந்தது.