பில்லி சூனியம் செய்ததாக கூறி 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை உயிரோடு எரித்து கொன்ற கொடூரம் பீகாரில் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் ராம்தேவ் மஹ்தோ என்பவர் வசித்து வருகிறார். இவரது குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் 50 வயதான பாபுலால் ஓரான் என்பவரை ராம் தேவ் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளார். ஆனால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில் குழந்தையின் உயிரிழப்புக்கு பாபுலால் சூனியம் வைத்தது தான் காரணம் என்று கூறி அவரையும் அவரது குடும்பத்தையும் சேர்ந்த அனைவரையும் தாக்கியதோடு உயிரோடு வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மட்டும் தப்பி ஓடிய நிலையில் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.