
மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் நகரில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை குழந்தைகளின் படிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வீடு வாங்கிய நிலையில் குடும்பத்துடன் அங்கேயே வசித்து வந்தனர். இந்நிலையில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே தந்தை சுரேஷ் தனது மகளுடன் இருந்து பயிற்சி அளித்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சுரேஷ் தனது மனைவியுடன் சந்தைக்கு சென்றார். மறுநாள் நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தைக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பிய போது தன்மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தார்.பின்னர் இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு தன் மகளின் தற்கொலை குறித்து பேசிய சுரேஷ், “என் மகள் நன்றாக படிப்பார். 10ம் வகுப்பு தேர்வில் 92% மதிப்பெண்களை பெற்றிருந்தார். அவருக்காக தான் இந்த வீட்டை வாங்கினோம். ஆனால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த நிலையில் தன்னுடைய மகளிடம் மன அழுத்தத்திற்கான எந்த அறிகுறியும் காணவில்லை என்று கூறினார்.
மேலும் கோட்டா நகரில் இதுவரை நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகளின் தற்கொலை எண்ணிகையில் இது 14 ஆவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.