
தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் அதிக அளவில் பணத்தை இழந்து, அதனை ஈடு கட்டுவதற்காக சிலரிடம் கடனும் வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு விரக்தியடைந்தார்.
இதற்கிடையில் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக போடிக்கு சென்று இருந்த அவர், தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவர் தனது தாய் வீட்டில் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.