
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சுற்றுலாத்தளமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் AIMIM கட்சியின் தலைவர் மற்றும் ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டார்.
அங்கு பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய ஓவைசி “பாகிஸ்தானை விட இந்தியா வலிமையான நாடாகும். பாகிஸ்தான் இந்தியாவை ஒருபோதும் அமைதியாக இருக்க விடாது” என்றும். அவர் பாகிஸ்தானால் உள்நாட்டில் உள்ள பல்வேறு இன குழுக்கள் இடையே அமைதியை ஏற்படுத்த இயலாத நிலையில் அது ஒரு தோல்வியடைந்த நாடாகும் என்று குற்றம் சாட்டினார்.
அதோடு அண்டை நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் போன்றவற்றுடன் பாகிஸ்தானுக்கு நல்லுறவு கிடையாது என கூறினார்.
மேலும் மத்திய அரசு பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானை எப்.ஏ.டி.எப் என்னும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழுவின் கிரே பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.