
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் வேப்ப மர கட்டைகளை பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் திகா கோவில் சிலை செய்யப்பட்டதாக கேள்வி எழும்பியுள்ளது. இதனால், ஏற்கனவே ஒடிசாவில் வேலை பார்த்து வரும் பெங்காலி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாவது, நாங்கள் ஏன் திருட்டு வேப்ப மரக்கட்டையை பயன்படுத்த வேண்டும்? அது போன்ற வளங்கள் எங்கள் பகுதிகளிலேயே அதிகம் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரம் அற்றவை. ஏற்றுக்கொள்ள முடியாதவை.
திகாவில் நாங்கள் ஜெகநாதர் கோவில் கட்டியதற்கு ஏன் இவ்வளவு கோபம்?. மேற்கு வங்காளத்தில் ஜகன்நாதரை வழிபடுவது பெரிய குற்றமா?. ஒடிசாவில் இருந்து பலரும் மேற்கு வங்கத்தில் அமைதியாக வேலை செய்வது போல, வங்காளத்தை சேர்ந்தவர்களும் ஒடிசாவில் வேலை செய்கிறார்கள்.
பெங்காலி மொழி பேசுவதனால் மட்டுமே பொதுமக்கள் தாக்கப்படும் தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க டிஜிபி, ஓடிஸா டிஜிபியிடம் பேச உள்ளார். எங்கள் மக்கள் எந்தவித குற்றமும் செய்யாமல் தாக்கப்படுவது எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது இவ்வாறு மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.