
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கலுக்காலி முட்டம் பகுதியில் வசித்து வந்தவர் அய்யாபிள்ளை (50). இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். அங்கு பரிமளா(46) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். பரிமளாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து அய்யாபிள்ளையை இரண்டாவதாக பரிமளா திருமணம் செய்துள்ளார்.
அய்யாபிள்ளைக்கும், பரிமளாவிற்கும் ஒரு மகன் உள்ளார். இதனை அடுத்து பரிமளா சிங்கப்பூருக்கு சென்று வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அதன்பின் பரிமளா வடலூரில் சொந்த வீடு கட்டி வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கே வந்துள்ளார். வெளிநாடு சென்றபின் அய்யாபிள்ளைக்கு குடிப்பழக்கம் அதிகமாகி தினமும் வீட்டிற்கு வந்து பரிமளாவிடம் தகராறு செய்து சித்திரவதை செய்துவந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி அய்யாபிள்ளை காணவில்லை என அவருடைய அண்ணன் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அய்யாபிள்ளையை தேடி வந்துள்ளனர். இறுதியில் மார்ச் 28ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு அய்யாபிள்ளை கொலை செய்யப்பட்டதாக பரிமளா கிராம VAOவிடம் சரணடைந்தார். இதில் அவர் அளித்த வாக்குமூலத்தில், கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை துன்புறுத்தியதால் சம்பவ நாள் அன்று தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து கட்டையால் அடித்ததால் உயிரிழந்தார். இதனால் அவரை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்கில் தூக்கி போட்டு விட்டதாக கூறினார். இதற்கு வடலூர் பகுதியை சேர்ந்த கொத்தனார்கள் ராமலிங்கம்(72), தமிழரசன்(42) ஆகியோர் உதவியாக இருந்ததாகவும் பரிமளா வாக்குமூலம் அளித்தார்.
இதனை அடுத்து பரிமளா, அவரின் தாயார் சரஸ்வதி, தமிழரசன், ராமலிங்கம் ஆகியுரை கைது செய்தனர். இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஷோபனா தேவி விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கணவனை கொன்றதால் பரிமளாவுக்கு ஆயுள் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் கொலை குற்றத்தை மறைப்பதற்கு உதவிய சரஸ்வதி, தமிழரசன், ராமலிங்கம் ஆகியோருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை, 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.