
கர்நாடகா மங்களூருவில் உள்ள கிராமத்தில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட கதீஜா, ஜூலைக்கா, ஃபாத்திமா, சல்மா ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும் கதீஜா, ஜூலைக்கா, ஃபாத்திமா ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் படித்து வந்த அரசுப் பள்ளியின் ஆங்கில ஆசிரியரான சந்தோஷ்குமார் கடந்த 21 நாட்களாக அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்களது உறவினர் கூறியதாவது, உணர்வு ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் அவர் உதவி செய்துள்ளார். அக்குழந்தைகள் படித்த பள்ளியின் நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரிடமும், மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளின் சூழலை எடுத்துரைத்து ஒரு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து கொண்டு வந்தார்.
சிகிச்சை பலனின்றி தாய், மகள் என மூவர் இறந்த பிறகும், இறுதி மரியாதை வரை கூட ஆசிரியர் சந்தோஷ் உடன் இருந்தார். இக்கட்டான நேரத்தில் ஆசிரியர் எங்களுடன் நின்றது உண்மையில் பேர் உதவியாக இருந்தது என்று கூறினார். இதுகுறித்து ஆசிரியர் சந்தோஷ் கூறியதாவது, மாணவி ஜூலைக்கா விபத்துக்கு முன்தினம் பள்ளிக்கு வந்தபோது என்னுடன் பேசினார்.
படிப்பாளி, அதிகம் பேச மாட்டார், அப்படிப்பட்ட குழந்தை 60% தீக்காயங்களால் பாதிக்கப்பட்டதை அறிந்தபோது எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போது கூட அந்த குழந்தைகள் பரிட்சையை நினைத்து கவலைபட்டனர். நான் அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். 3 பேர் இறந்தது ஆறாத வடுவாக எங்கள் மனதில் வாழ்நாள் முழுக்க இருக்கும் என்றும் அவர் கூறினார்.