
ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், MGR அவரோடு இருந்தவன் என்ற எல்லா முறையிலே… நான்தான் அவரை கடைசி வரையிலேகூட இருந்து எல்லாம் பார்த்தேன். அவர் மனதில் என்ன தோன்றுதோ பேசுவார். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலையும் மாநாடு மாதிரி கூட்டம் போட சொன்னார். ஏனென்று கேட்டேன் ? என்னுடைய தொண்டர்களை பாக்கணும்.
அரசியலில் தன்னை வளர்த்து ஆளாக்கிய தொண்டர்களை… தான் இறந்து விடுவோமோ என்ற நிலை வந்த பொழுது அவர்களை பார்க்க வேண்டும். எப்படி ஒரு வயதான பாட்டி பேரப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று விரும்புவாரோ? எப்படி ஒரு மூத்த தாய் – தந்தையர்கள் கடைசி மூச்சிலே பிள்ளைகளை எல்லாம் அழைத்து வர சொல்லி பார்க்க வேண்டும் என்று விரும்புவார்களோ, அதைப்போல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநாடு நடத்த சொல்லி அவர் அந்த தொண்டர்களை எல்லாம் பார்த்தார்.
எல்லா மாவட்டங்களிலும் பார்த்துவிட்டு தான் அவர் வந்து கடைசியிலே தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அந்த அளவுக்கு தொண்டர்களிடத்திலே அன்பு. ஆகையால் தான் ”புரட்சி தொண்டன்” என்கின்ற பெயர் எப்படி இவர்களுக்கு வந்தது என்று எனக்கே தெரியவில்லை. 1962 ஆம் ஆண்டு பாம்பேயில் இருந்து தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி என்ற ஆங்கில வார இதழ் வந்தது. அதனுடைய நிருபர் ராமன், பேரறிஞர் அண்ணாவை பேட்டி காண்கிறார். அந்த காலத்துல திராவிட முன்னேற்றக் கழகம், பிராமணர்களுக்கு எதிரான இயக்கம் என்று வட நாட்டிலே… குறிப்பாக டெல்லியில் வதந்தி.
அதை மனதிலே வைத்து கொண்டு அந்த ராமன் என்பவர் அறிஞர் அண்ணா அவர்களை கேட்கிறார். உங்கள் கட்சியை சேர்வதற்கு என்ன தகுதி வேண்டும் ? ஜாதியா ? மதமா ? ஆரியரா ? திராவிடரா ? என கேட்கின்றார். அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லுகிறார்கள் … (Nothing But Service That Count ) தொண்டு செய்ய யார் தாயாரோ அவர்கள் கட்சியில் சேரலாம். தொண்டு செய்வதற்கு யார் வந்தாலும் என் கட்சியில் சேரலாம் அப்படினு சொல்லுறாரு அறிஞர் அண்ணா..
அவரையே ஆசானாக ஏற்றுக்கொண்ட புரட்சித்தலைவரானாலும் சரி… அவர்கள் வழியிலே வந்த புரட்சித்தலைவி ஆனாலும் சரி… மக்களால் நான், மக்களுக்காக நான் என்றார். இதற்க்கு என்ன அர்த்தம் ? அவர்கள் தொண்டர்களை தான் நம்பினார்கள். தொண்டர்களும் அவர்களுக்கு ஆதரவாக கடைசி வரை இருந்தார்கள். ஏன் சொல்லுறேன் என்றால் ? இது வெறும் பொதுக்குழு, செயற்குழு, உறுப்பினர்களை மட்டும் வைத்து நடந்த இயக்கமே அல்ல.
புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு கட்சியே கிடையாது. அவரை தூக்கி வெளியிலே எறிந்த போது அவருக்கு ஏது கட்சி ? மக்கள் செல்வாக்கு என்பது ஏற்கனவே இருந்தது. அதை எடுத்து வைப்பதற்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. சட்டியிலே இருந்தது, இலையிலே போடுவதற்கு அகப்பை தேவை. அந்த அகப்பை தான் கட்சி.
இப்பொழுது கம்யுனிஸ்ட் கட்சி என்றால் ? அவர்கள் ஒரு தத்துவத்தை சொன்னார்கள் . அந்த தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் உறுப்பினர் ஆகிறார்கள். புரட்சி தலைவருடைய கட்சி அப்படியல்ல… அவருக்குனு ஏற்கனவே செல்வாக்கு. அந்த செல்வாக்கை பயன்படுத்துவதற்கு ஒரு கட்சி, அவருக்கு தேவை. இன்றைக்கு நம்முடைய ஓபிஎஸ் அவர்களுக்கு அது தான் நிலைமை என தெரிவித்தார்.