சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது தேனி மாவட்ட தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு இளைஞர் ஒருவரை காவல்துறையினர் அழைத்து வந்துள்ளனர். அவரை இன்ஸ்பெக்டர் அபுதல்கா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுயசம்பு ஆகியோர் காலால் எட்டி உதைத்தும், லத்தியால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேலும் அந்த வீடியோ வெளியானதால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை செயல்பாட்டாளர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வீடியோவில், தாக்கப்பட்ட இளைஞர் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் அன்று விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆனால் அவர் எதற்காக விசாரணை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்?, என்ன என்பது குறித்த காரணங்களை விசாரணை நடத்தி அவரது குடும்பத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வீடியோ குறித்த விசாரணையில் தேனி மாவட்ட எஸ்.பி சம்பவத்தில் ஈடுபட்ட எஸ்.பி மற்றும் இரண்டு காவல்துறையினரை ஆயுதப் படைக்கு மாற்றி உள்ளனர்.