டெல்லி விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை ஸ்ரீநகர் நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானத்தில் சென்று கொண்டிருந்த போது கடுமையான ஆலங்கட்டி மழை ஏற்பட்டதால், திடீரென விமானம் குலுங்கியது. இதனால் விமானத்திலிருந்த பயணிகள் பதறினார்கள். விமானம் குலுங்கிய போது மேல்நிலையில் சாமான்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் திறந்து பயணிகள் மீது விழுந்தன.

இந்த விமானத்தில் 227 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்த நிலையில் விமானி துணிச்சலுடன் செயல்பட்டு ஸ்ரீநகர் விமான நிலைய ஏடிசிஐ தொடர்பு கொண்டு அவசர நிலையை அறிவித்தார். அதன் பின் விமானம் மாலை 6.30 மணி அளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானியின் துணிச்சலான செயல் மற்றும் தைரியத்தை பாராட்டிய பயணிகள் விமானி மற்றும் கேபின் குழுவினருக்கு நன்றியை தெரிவித்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by The Free Press Journal (@freepressjournal)

இந்த சம்பவத்தை விமானத்திலிருந்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகிறது. இதைத்தொடர்ந்து கடும் புயலின் காரணமாக விமானம் குலுங்கியதாகவும், விமானத்தின் முன் பகுதியில் சிறிய அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், முழுமையான ஆய்வு மற்றும் பழுதுபார்ப்பு செய்யும் வரை அந்த விமானம் இயக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 227 உயிர்களை பாதுகாக்க விமானி துணிச்சலுடன் செயல்பட்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.