
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று அதிகாலை 6:00 மணி அளவில் சென்னையிலிருந்து, கன்னியாகுமரி செல்வதற்காக தூத்துக்குடி இண்டிகோ விமானம் மூலம் பயணம் மேற்கொண்டார். அமைச்சருடன் 77 பயணிகள் இதே விமானத்தில் பயணம் மேற்கொண்டனர்.
இந்த விமானம் தூத்துக்குடி விமான நிலையம்அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென மோசமான வானிலை மாற்றம் ஏற்பட்டதால் உடனடியாக மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க அறிவிப்பு வந்தது. இதனால் உடனே விமானம் தரையிறங்கியது. அமைச்சர் உட்பட பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேறி வாகனங்கள் மூலம் தூத்துக்குடிக்கு சென்றனர். அமைச்சர் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.