திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் வசித்து வந்தவர் மாயாண்டி. இவர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக பாளையங்கோட்டை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்ம கும்பலால் சாராமாரியாக நீதிமன்றத்தின் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் இந்த கொலை வழக்கு குறித்து தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் அமர்வு முன் நடத்தப்பட்டது. இதனை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருநெல்வேலி சம்பவம் தொடர்பாகவும் மற்றும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இது குறித்த விசாரணையை மறுநாள் ஒத்தி வைத்தனர்.இந்த நிலையில் நெல்லை கொலை சம்பவ வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் பணியில் கவனக்குறைவாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் நெல்லை காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொலை சம்பவத்தை விட கொலை நடைபெற்ற இடம் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், நீதிமன்றம் முன்பு  இதுபோன்ற சம்பவம் நடை பெற்றால் சாட்சிகள் எவ்வாறு நீதிமன்றம் வருவார்கள்? என கேள்வி எழுப்பினர்.

சம்பவம் நடைபெறும் போது ஒருவரை தவிர மற்ற அனைத்து காவல்துறையினரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பணியில் ஈடுபட்டிருக்கும் போது பாதுகாப்பில் கவனம் இல்லாமல் செல்போனில் மூழ்கி இருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கூறினர். மேலும் சம்பவ இடத்திலேயே துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த சிறப்பு எஸ்.ஐ உய்க்கொண்டானுக்கு உயர் நீதிமன்றத்தின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நீதிபதிகள் தெரிவித்தனர்.