
உத்தரபிரதேச மாநிலம் பரேலியின் ஜம்கண்டி பகுதியில், சாலையோர மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த காய்கறி விற்பனையாளர் சுனில் பிரஜாபதி (45), நகராட்சி ஊழியர்கள் கவிழ்த்திய தள்ளுவண்டியில் இருந்த குப்பை மற்றும் சேற்றில் புதைந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். சம்பவம் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஏற்பட்டது. சதிபூர் சாலையில் உள்ள கல்லறைக்கு அருகே, சோர்வில் தூங்கியிருந்த சுனிலை, வடிகால் சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் கவனிக்காமல் சேற்றுடன் கூடிய வண்டியை அவரது மீது கவிழ்த்துவிட்டனர்.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, சுனிலின் குடும்பத்தினர் அவரைத் தேடி வந்த போது, அவர் தூங்கிய இடத்தில் சேறும் குப்பையும் நிறைந்திருந்ததைப் பார்த்தனர். சந்தேகத்தின் பேரில் அவற்றை அகற்றியபோது, சுனில் அதன் கீழே மூச்சுத் திணறி கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, மருத்துவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். பிரேத பரிசோதனையில், சுனிலின் தொண்டை, மூக்கு, வாயில் சேறு இருந்தது மூலம், மூச்சுத் திணறலால் மரணம் ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுனில் தான் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தார். அவரது மனைவி கோமதி, மகள்கள் ஷில்பி, ஸ்வாதி மற்றும் மகன் ஆர்யன் ஆகியோர் தற்போது வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நகராட்சி ஒப்பந்ததாரர் நயீம் சாஸ்திரி மீது பரதாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது ஊழியர்களே தள்ளுவண்டி கவிழ்த்ததாகக் கூறப்படுகிறது. தற்போது போலீசார் குற்றவாளிகளை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.