
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி கூறினார். அந்த வகையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஒரு நபர் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி பேருந்து நிலையத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அந்தோணி மைக்கேல் சுகந்தன் என்பவரை சுற்றி வளைத்த நிலையில் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் கூர்மையான ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தது தெரியவந்தது. மேலும் பல வழக்குகளில் குற்றவாளியான இவர், தற்போது யாரை கொல்வதற்காக ஆயுதங்களுடன் சுற்றி வந்தார் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.