சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, அமலாக்கத்துறையின் மிரட்டலுக்கு எல்லாம் தமிழ்நாடு அஞ்சாது. இதை அறியாத அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் குட்டு வைத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலேயே சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத்துறை தற்போது மீண்டும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. தமிழ்நாட்டின் போர் குணத்தை எதிர்கொள்ள முடியாத பாஜக அச்சுறுத்தல் என்ற  ஆயுதத்தை அமலாக்கத்துறை மூலம் நீட்டியது.

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளை தனது கைப்பாவையாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் முகாந்திர குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை தொடர்ந்து எதிர்க்கட்சிகளை முடக்குவதே முழு நேரம் வேலையாக கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர்களையும், அக்கட்சியை சேர்ந்த முதல் மந்திரிகளையும் கைது செய்து ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை செய்யும் பாஜகவிற்கு அடியாளாக அமலாக்கத்துறை செயல்படுகின்றது.

மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் அரசியல் தலைவர்கள் மீது மொத்தம் 193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது 1.03% மட்டும் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை பாஜக ஒத்துக் கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறையை புனிதமான விசாரணை அமைப்பாக காட்டி வந்த பாஜகவின் பிம்பம் தமிழ்நாட்டில் தான் துடைத்தெறியப்பட்டது. கொள்ளையனோடு கூட்டு சேர்ந்த காவலனாக அமலாக்கத்துறை பாஜக ஓடு இணைந்து அவர்களது குற்றங்களுக்கு துணை போயி கொண்டிருப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்று கூறப்பட்டுள்ளது.