
ராஜஸ்தான் மாநிலத்தில் கொதிக்கும் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் அக்மா என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் ஹரிநாராயணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் சரிகா என்ற பேத்தி இருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவரது பேத்தி சரிகா பூனையை பார்த்து பயந்து போய் ஓடி வந்துள்ளார்.
அப்போது வீட்டின் சமையலறையில் கொதித்துக் கொண்டிருந்த பால் நிறைந்த பானைக்குள் எதிர்பாராத விதமாக குழந்தை தவறி விழுந்துவிட்டார். அதனை கண்ட குடும்பத்தினர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தகவல் காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் குழந்தையின் தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.