பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள அகியபூர் கிராமத்தில் மந்து சிங் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் முகியா என்பவருக்கும் மந்து சிங்கிற்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் இரு தரப்பினரும் மோதி கொண்ட நிலையில் பிரச்சனை வெடித்தது.

நேற்று அதிகாலை மந்து சிங், கிராமத்தின் அருகே உள்ள கால்வாயில் தனது சகோதரர்களான சுனில் சிங், விரேந்திர சிங், பின்ஜு சிங், வினோத் சிங்க் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் முகியா அனுப்பிய சிலர் துப்பாக்கியால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் வினோத் சிங், சுனில் சிங், விரேந்திர சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மந்து சிங், பின்ஜு சிங் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.