
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அன்று டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று நட்சத்திர வீரரான விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது.
அதேபோன்று பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோற்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிருக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இந்த தொடரில் முன்னாள் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் இருவர் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது. இவர்கள் இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்களை விமர்சித்தனர்.
இருப்பினும் இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இருவரும் தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். இதற்குப் பின்னணியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் படி, 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கௌதம் கம்பீர் புதிய அணியை கட்டமைக்க விரும்புவதாக தெரியவந்துள்ளது.
அதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை கழற்றிவிட தேர்வு குழுக்கு அவர் பரிந்துரைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது பொருத்தமானது என்று தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரும் கருதுவதால் அவருடைய ஆதரவையும் கம்பீர் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.