மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அகால்கோட் பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளரான ஹாஜி உஸ்மான் மன்சூரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதோடு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 4 தொழிலாளர்கள் தீ விபத்தில் பலியாகினர் என்று கூறப்படுகிறது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து கிட்டத்தட்ட 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல்களை தெரிவித்துள்ளார். அதோடு காயமடைந்தவர்கள் விரைவாக குணமாக பிரார்த்தனை செய்கிறேன் என ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.