
தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் ஆர் மரையில் கங்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கங்காதர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் அவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் அஞ்சலி தனது கணவரை பிரிந்து 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். கங்காதரன் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நலக் கோட்டில் வழக்கு தொடர்ந்தார்.
சவுதி அரேபியாவுக்கு சென்ற அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார். நேற்று இவர்களது வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நிஜமாபாத்தில் மனைவியை சந்தித்த கங்காதர் வழக்கு விசாரணைக்கு ஆஜாராகுமாறு மனைவியை வற்புறுத்தினார். ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கங்காதர் மனைவியின் வீட்டிற்கு சென்றார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஞ்சலியின் கழுத்தை அறுக்க முயன்றார்.
இதனை கண்ட அவரது மகள்கள் தடுத்தனர். இருப்பினும் கங்காதர் மகள்களின் கண் எதிரிலேயே மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அஞ்சலி சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மகள்களின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஞ்சலியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கங்காதரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து காவல் துறை வழக்கு பதிவு செய்து கங்காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.