இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நேற்று மாலை முதல் நெட்வொர்க் சிக்கல்களை சந்தித்தது. அதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில், மற்றும் கேரளாவில் ஏர்டெல் பயனர்களுக்கு திடீரென சிக்னல் கிடைக்கவில்லை.இதனால் பொதுமக்கள் பலரும் தவித்தனர். மேலும் நெட்வொர்க் பிரச்சனை தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்திற்கு 10,000க்கும் மேற்பட்ட புகார்களை பெற்றது.

அந்தப் புகார்களில், மொபைல் டேட்டா சேவைகள், அழைப்புகள் திடீரென துண்டிக்கப்படுவதாக மிகுதியான புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஏர்டெல் பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது புகார்களை பதிவிட்டு விமர்சித்து வந்துள்ளனர். இதுகுறித்து  ஏர்டெல் நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

அதில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் ஏர்டெல் தற்போது நெட்வொர்க் செயலிழப்பை சந்தித்துள்ளது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் தொழில்நுட்ப குழுக்கள் அந்தப் பிரச்சினை குறித்து தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். சீக்கிரமாக சேவைகளை முழுவதுமாக மீட்டெடுக்க செயல்பட்டு வருகின்றனர் என கூறியுள்ளது.