தமிழகம் முழுவதும் நேற்று சமூக அறிவியல் பாடத்தோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் கடைசி தேர்வை எழுதிவிட்டு 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை. பள்ளியில் மதியமே பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் இரவு 8 மணி ஆகியும் மாணவிகள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாணவிகளின் சக தோழிகளிடம் விசாரித்த போது எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் பதற்றமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

மேலும் மாணவிகளின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். அதில் 5 மாணவிகளின் செல்போன் சிக்னல்களும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருப்பதை தெளிவுபடுத்தியது. இதனை அடுத்து பவானி காவல்துறையினர் சமயபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்தத் தகவலின் பேரில் சமயபுரம் காவல்துறையினர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரைந்து சென்று 5 மாணவிகளையும் மீட்டனர். அதன் பின் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், தேர்வில் வெற்றி பெற சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் கொடுக்கவில்லை எனவும் கூறினர். இதனை அடுத்து மாணவிகளுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி 5 பேரையும் ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.