ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரில் கேஐஐடி கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பிரிசா ஷா என்ற மாணவி கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்துள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த இந்த மாணவி கடந்த வியாழக்கிழமை மாலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் இந்தியாவில் உள்ள நேபாள தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் மகளின் உடலை தகனம் செய்வதற்காக வந்திருந்தனர்.

பின்னர் நேபாள பாரம்பரிய முறைப்படி பிரிஷாவின் உடலுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. அந்த இறுதிச் சடங்கில் அகில பாரதீய நேபாளி ஏக்தா சமாஜ் கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிரிசாவின் தந்தை “மாலை 3 மணிக்கு தங்களுடன் பேசிய அவர் 8 மணிக்கு இறந்ததாக தகவல் வந்தது. என் மகளின் தற்கொலைக்கு பின்னால் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று வருத்தத்தோடு கூறினார்.

மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக நேபாள மாணவி, மாணவர் ஒருவரின் தூண்டுதலினால் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து பிரிஷாவின் தற்கொலை பல்கலைக்கழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.