
உத்திரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி-யான ஜியர்உர் ரஹ்மான் பார்க் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டில் உள்ள 2 மின் மீட்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில மின்சாரத் துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது மின்சாரம் திருடியதற்காக 1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரது வீட்டில் மின்சாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவரது வீட்டில் இருந்த மின் சாதனங்களை கணக்கெடுத்தனர். அவரது வீட்டில் 50க்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள், 3 ஸ்பிலிட் ஏசிகள், 2 பிரிட்ஜ்கள், 1 காபி மேக்கர், கீசர், மைக்ரோவேவ் ஓவன், டீப் ஃப்ரீசர் போன்ற பல சாதனங்கள் உள்ளன. இருப்பினும் அவரது வீட்டில் கடந்த 6 மாதங்களாக மின்கட்டணம் புஜ்ஜியமாக இருந்துள்ளது.
இதுகுறித்து மாநில மின்சாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், அவரது வீட்டிற்கு 2 கிலோ வாட் இணைப்பை எடுத்துள்ளார். அதே சமயம் சுமை 16.5 கிலோ வாட் ஆகும், 2 நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்ட புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் 5.5 கிலோ வாட் மின்சுமையை காட்டுகிறது. வீட்டில் 10 கிலோ வாட்ஸ் சோலார் பேனல் மற்றும் 5 கிலோ வாட் ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதைக் கொண்டு அவரது வீட்டில் 19 கிலோ வாட் மின்சாரம் ஏற்ற முடியும், ஆனால் குடியிருப்பில் உள்ள சோலார் பேனல் இயங்கவில்லை. அதன்படி மாவட்ட மின்சார குழு தலைவராக செயல்படும் சமாஜ்வாதி எம்பி பார்க்கின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது எம்.பி யின் தந்தை, மாநில மின்துறை அதிகாரிகளை மிரட்டியது கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அரசு பணியை தடுத்ததாக பார்க்கின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.