தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் 2025- 26 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூபாய் 349 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ₹349 வழங்குவதற்காக ரூபாய் 297 கோடி நிதியினை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதனை அடுத்து சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய சுமார் 1,30,000 கரும்பு விவசாயிகளுக்கு இந்த சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு ஊக்கத் தொகைக்கு தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகையை வழங்கிட உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.