மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா தெற்கு பாகா ஜதின் நகரில் திடீரென நான்கு மாடகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் சரிந்து கீழே விழுந்தது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு  10 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் வலது புறமாக சாய்ந்திருந்த கட்டிடத்தை வலுப்படுத்துவதற்காக அரியானாவை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்பந்த பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அனுமதியும் கொல்கத்தா மாநகராட்சியிடம் பெறவில்லை. கட்டிடத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது கட்டிடம் திடீரென வலது புறமாக சரிந்து விழுந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வலுப்படுத்தும் பணி நடைபெற்றதால் கட்டிடத்தில் உள்ளவர்கள் ஏற்கனவே வேறு இடத்திற்கு மாறிவிட்டனர். அதனால் இந்த சம்பவத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து கொல்கத்தா மாநகராட்சி அதிகாரி கட்டிடம் முழுவதும் இடிக்கப்படும் இது குறித்து வழக்குப்பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து ஜாதவ் பூர் எம்.எல்.ஏ தேப பிரதா மஜ்ம்தார் கூறியதாவது, இந்தக் கட்டிடம் எந்த ஒரு அங்கீகாரமும் இன்றி கட்டுமான ஒப்பந்ததாரர் பணியை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதனால் கட்டுமான ஒப்பந்ததாரரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விரைவில் இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் கார்டன் ரிச் பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகினர். இதில் ஒரு பிளாட்டின் உரிமையாளர் கூறும்போது, இந்த கட்டிடத்தில் கூடுதலாக ஒரு தளம் கட்டப்பட்டுள்ளது. தரம்  குறைவான பொருள்கள் மூலம் கட்டப்பட்டதால் இடிந்து  விழுந்துள்ளது. அரசியல் பின்னணி கொண்டவர்கள் கட்டியதால் இதனை எதிர்த்து போராட முடியவில்லை. இதனை வாங்க எங்களுடைய சேமிப்புகள் அனைத்தையும் செலவிட்டு உள்ளோம் என மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.